இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (23-10-2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், IND-TN-10-MM-459 மற்றும் IND-TN-10-MM-904 பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (23-10-2024) கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, தான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துவதை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிகாட்டியுள்ளார்.
இத்தகைய கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் முதலமைச்சர் தன் கடிதத்தில் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கூட்டுப்பணிக் குழுவினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டுவரும் என்று தான் நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.