கள ஆய்வும் கழக பணியும் தொடரும்… கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

CM M.K.Stalin
முதல்வர் ஸ்டாலின்
Published on

கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கட்சி பணிகளையும் ஆய்வு செய்வேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மக்களிடம் செல்… அவர்களுடன் வாழ்… என்று நமக்கு பொது வாழ்க்கைக்கானப் பாடம் கற்றுக் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் அன்புத் தம்பியாக, அவர் உருவாக்கிய திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு வழிநடத்திய கருணாநிதியும் அதைத்தான் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கின்ற இயக்கமாகும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே நமது திராவிட மாடல் அரசின் அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டும், அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டும் அறிக்கை தயாரித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுபோலவே, அமைச்சர்கள் பலரும் அறிக்கைகளை அளித்திருந்தனர். அதனை நானும், துணை முதலமைச்சரும், மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் முடங்கிப் போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், முதலமைச்சரான உங்களில் ஒருவனான நானும், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர், சேர்மன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

பருவ மழை தொடர்கின்ற நிலையில், மழை நீர் தேங்குகிற இடங்களில் உடனே அவற்றை வடியச் செய்வது, போக்குவரத்துக்கும் அத்தியாவசியத் தேவைக்கும் பாதிப்பின்றி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடைபெற்று வரும் நிலையில், இதனைப் பொறுக்க முடியாமலும், தாங்கள் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததாலும் எதிர்வரிசையிலே இருப்பவர்கள், அதிலும் தங்களுடைய பத்தாண்டுகால மோசமான ஆட்சிக்காலத்தில், கடைசி நான்கு ஆண்டுகளில் படுமோசமான நிர்வாகம் நடத்தியவர்கள், மக்கள் மீதான அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.

பொதுவாழ்வில் விமர்சனங்கள் சர்வசாதாரணம்தான் என்பதால் எதிர்த்தரப்பின் ஆதாரமற்ற விமர்சனங்களைக் கடந்து, திராவிட மாடல் அரசு தனது மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.” என்று கூறியுள்ள முதலமைச்சர் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

“ஆதிதிராவிட மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான சமூக நீதித் திட்டங்களை நிறைவேற்றி வருவதுதான் திராவிட மாடல் அரசு. நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, துணை முதலமைச்சர் பொறுப்பினை வகித்த உங்களில் ஒருவனான நான், சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்களுக்கான 3% உள்ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை முன்மொழியும் வாய்ப்பினைப் பெற்றேன். கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அந்த இடஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் காணும்போது அவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களில் ஒருவனாகப் பெருமை கொள்கிறேன்.

திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்!

அரசு சார்ந்த பணிகளை மட்டும்தான் கவனிப்பீர்களா என்று உடன்பிறப்புகளான உங்களின் மனக்குரலை உங்களில் ஒருவனான நான் அறிவேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். கண்மணிகளாம் உடன்பிறப்புகளையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com