முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘நான் ஓடி ஒளிபவன் அல்ல’ – முதல்வரின் பதில்!

Published on

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் காலையிலேயே வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், கள்ளக்குறிச்சி உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடந்தது. திமுக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் செல்வபெருந்தகை உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் இந்த விவாதம் மீது பேசினார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய ஸ்டாலின்:

“எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்து தங்களது கருத்து தெரிவித்திருக்கலாம். இதுபோன்ற முக்கிய பிரச்னையிலும் அரசியல் காரணங்களுக்காக ஏனோ வெளிநடப்பு செய்துவிட்டார்.” என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் கருணாபுரம் உயிரிழப்பு வேதனை அளிப்பதாக கூறினார்.

“அண்டை மாநிலத்தில் உற்பத்தி செய்யபடும் மெத்தனால் சட்டவிரோதமாக நம் மாநிலத்துக்கு கொண்டு வரப்பட்டு, இதுபோன்ற சம்பவங்களுக்கு வழிவகுத்து விடுகிறது.

உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பியுள்ளேன். அவர்களிடம் இரண்டு நாள்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி துரித நடவடிக்கை எடுப்பேன்.

இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள்மீது இதுவரை 4,63,710 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 4,61,084 பேர் கைதுசெய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் மட்டும் 14,606 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 10,154 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.

இப்படி கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். அதனடிப்படையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக அளிக்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை ஒவ்வொரு மாதமும் மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து நிலையான வைப்புத்தொகை வைக்கப்படும். அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியோடு அந்தத் தொகை வழங்கப்படும்.

பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்.

உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான்.

எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், போதை பொருட்கள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர்காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது விசாரிக்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்திலும் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை வைத்து அரசியல் பேச விரும்பவில்லை; சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com