மதுரை கோரிப்பாளையத்தில் தேவரின் உருவச் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 117ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குரு பூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரைக்கு வருகை தந்தார்.
இதையடுத்து, மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி. ஆர். பி. ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு சாலை மார்க்கமாக செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.