புதுவை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

புதுவை கண்ணன்
புதுவை கண்ணன்
Published on

புதுச்சேரி மாநில முன்னாள் சட்டப்பேரவை தலைவர் புதுவை கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறு வயதிலேயே தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் கண்ணன். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, புதுவை மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டினார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, புதுவையின் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் கண்ணனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.

இதற்கிடையே, மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி த.மா.கா. கட்சியைத் தொடங்கிய போது, அவருக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், புதுவை த.மா.கா. தலைவராக இருந்து வந்தார். அதன்பிறகு புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ், புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என கண்ணன் தனிக்கட்சி தொடங்கினார். இதன் பின்னர், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்து எம்.பி.யானார். பின்னர், காங்கிரசிலிருந்து விலகி அ.தி.மு.க. சென்றார், அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க.வில் சேர்ந்தார். மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் பா.ஜக.வு.க்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி அக்கட்சியிலிருந்து கண்ணன் விலகினார்.

புதுவை காங்கிரசின் முக்கிய தலைவராகவும், சபாநாயகராகவும், அமைச்சராகவும் கண்ணன் மிக பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கண்ணன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 9:51 மணி அளவில் காலமானார். இதனை அவர் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு நுரையீரல் நோய் பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும்” தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com