டெல்லி கணேஷ், இந்திரா செளந்தர்ராஜன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இந்திரா செளந்தர்ராஜன், டெல்லி கணேஷ்
இந்திரா செளந்தர்ராஜன், டெல்லி கணேஷ்
Published on

நடிகர் டெல்லி கணேஷ், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகர் டெல்லி கணேஷ், பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் இருவரும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி கணேஷ் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்திரா செளந்தர்ராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர்.

வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com