அந்திமழை இளங்கோவன் மறைவு- பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!

அந்திமழை பதிப்பாளர், நிறுவிய ஆசிரியர் இளங்கோவன்
அந்திமழை பதிப்பாளர், நிறுவிய ஆசிரியர் இளங்கோவன்
Published on

நமது அந்திமழை இதழின் பதிப்பாளரும் நிறுவிய ஆசிரியருமான அந்திமழை இளங்கோவன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற சிறப்பு வழிகாட்டுக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர், சாவித்திரி கண்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

” அந்திமழை மாத இதழின் நிறுவிய ஆசிரியரும் பதிப்பாளருமான என். இளங்கோவன் ஜூலை 28 அதிகாலை மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. கடந்த 34 ஆண்டுகளாக இதழியல் துறையில் இயங்கிவரும் இளங்கோவன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 1991 ஆம் ஆண்டு அந்திமழை என்ற கையெழுத்து பிரதியை நடத்தி வந்தார். கல்லூரி மாணவர்களின் இலக்கிய தாகத்தைத் தீர்க்கும் விதமாக அவர்களின் படைப்புகளைத் தாங்கி வெளியான இந்த முயற்சி அப்போது பரவலான கவனத்தைப் பெற்றது.

1990 களில் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், குங்குமம் ஆகியவற்றில் சுயாதீன பத்திரிகையாளராக பங்களிப்புகள் செய்து வந்த இளங்கோவன் விண் நாயகன் இதழில் முழு நேர இதழாளராகவும் இருந்தார்.

2004இல் அந்திமழை இதழை இணைய இதழாகக் கொண்டுவந்த இளங்கோவன், 2012 முதல் அந்திமழையை அச்சு வடிவிலும் தரமான மாத இதழாகக் கொண்டுவந்தார். செறிவான இலக்கியப் படைப்புகளோடு, வெகுஜனத் தன்மையுடன் சிறிதளவு அரசியல், சமூக கட்டுரைகளும் கொண்டதாக வந்துகொண்டிருக்கும் அந்திமழை தமிழின் முன்னணி படைப்பாளர்கள் பலருக்கு வேடந்தாங்கலாக இருக்கிறது.

இப்படிப்பட்ட ஓர் இதழியல் முன்னோடியான அவரின் மறைவு நமக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள், அந்திமழை ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் எங்கள் ஆறுதலை உரித்தாக்கிக் கொள்கிறோம்.” என்று சாவித்திரி கண்ணன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com