பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமையகத்தில் பணியாற்றிவரும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர், காவலர் பயிற்சிக் கல்லூரி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகடமியின் இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாதிக்குழுக்கள் சார்ந்த பிரமுகர்கள் கொல்லப்படுவது தொடரும்நிலையில், தலைநகரிலேயே தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் பலவும் குற்றம்சாட்டியிருந்தன. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளான வி.சி.க., சி.பி.எம். கட்சிகளும் தலைநகரில் நடைபெற்ற இக்கொலை காவல்துறைக்கு சவால் ஆகியுள்ளது என கருத்துத் தெரிவித்திருந்தன. உளவுப் பிரிவின் தோல்வி என்றும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், காவல்துறை அதிகாரியைப் பணிமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கையால் குற்றச்சாட்டுகளின் வீரியம் தணியுமா என்பது கேள்வியாகவே உள்ளது.