சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டப்பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து தமிழகத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தார். குறிப்பாக 3 கோரிக்கைகளை முதலமைச்சர் முன் வைத்தார். மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு நிதியை ஒதுக்க வேண்டும், ஒருங்கிணைந்த கல்வி நிதியை ஒதுக்க வேண்டும், தமிழக மீனவர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் கவனமுடன் கேட்டார். நிச்சயம் நிறைவேற்றி தருவார் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டப்பணிக்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டப்பணிக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் வேகமாக வளர்ந்து சென்னை நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது மிக முக்கியம். மேலும் பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 118 கிலோ மீட்டர் நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் அமையும் வகையில் 2ஆம் கட்ட மெட்ரோ செயல்படுத்தப்பட உள்ளது. ஆகையால் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிலையில், மெட்ரோ 2ஆம் கட்ட திட்டப்பணிக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ 2ஆம் கட்ட திட்டப்பணிக்கு நிதி ஒதுக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்தி முடிக்க உத்வேகத்துடன் செயல்படுவோம்” என பதிவிட்டுள்ளார். இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.