அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பைப் படித்து, தனக்கு மூன்று நாள்கள் தூக்கம் வரவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் 2006-2011 காலகட்டத்தில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ரூ78.4 இலட்சம், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ரூ.44.56 இலட்சம் என வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தனர் என 2012ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகளில் இருந்து இருவரையும் மாவட்ட நீதிமன்றங்கள் விடுவித்தன. அதை எதிர்த்து ஊழல் தடுப்புத் துறை மேல்முறையீடு செய்யவில்லை.
இந்த நிலையில், இருவரையும் விடுவித்ததில் சரியான முறை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஏற்கெனவே, அமைச்சர் பொன்முடி விடுவிப்பிலும், சுயவழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான் இதிலும் இன்று விசாரணையைத் தொடங்கினார்.
அப்போது அவர், “ விடுவிப்புத் தீர்ப்பைப் படித்து மூன்று நாள்களாக தூக்கமே வரவில்லை; நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சிகோ ஆட்சிக்கோ உரித்தது அல்ல; குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆனது.” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமைச்சர்கள் இருவரும் ஊழல் தடுப்புத் துறையும் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதில் மனு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.