தூர்தர்ஷன் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டதற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.