பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதை எதிர்த்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சென்னையில் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த விமான நிலையத்துக்கான அனுமதி கேட்டு மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிட்கோ கடிதம் வழங்கி இருந்தது.
மாநில அரசின் இந்த பரிந்துரையை ஏற்று பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த தகவலை மாநிலங்களவையில் நேற்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
அவர் எழுத்து மூலமாக அளித்த பதிலில், தமிழ்நாடு அரசின் மனு தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர், இந்த பரிந்துரையை ஆய்வு செய்த வழிகாட்டுதல் குழு, பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி அளித்து 9.7.2024ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது.
பசுமைவெளி விமான நிலைய கொள்கைகளின்படி, நிதியளித்தல் மற்றும் நிலம் கொள்முதல் உள்ளிட்ட விமான நிலைய திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு டிட்கோவை சார்ந்தது.’ என்று மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தனது பதிலில் கூறியுள்ளார்.
வலுக்கும் எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த அனுமதிக்கு பரந்தூர் மக்களும் சூழலில் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏகனாபுரம் கிராம நலக் கூட்டமைப்பின் செயலாளர் ஜி. சுப்ரமணி கூறுகையில், ‘பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள அமைவிட அனுமதியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் 728 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை.’ என்றார்.
‘நெல் விளைச்சல் செழிப்பாக நடக்கும் மற்றும் நீர்நிலைகள் அதிகம் கொண்ட பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் விமான நிலையம் அமைப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.’ பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்காக தமிழ்நாடு அரசு 13 கிராமங்களிலிருந்து 5,369 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முன்வந்துள்ளது. இதுவரை, 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை மட்டுமே தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்காக ஏகனாபுரம் கிராம மக்கள் முழுவதுமாக இடம்பெயர நேரிடும் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.