காவிரி பிரச்னையில் தி.மு.க. அரசு நாடகமாடுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்ததுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே,யே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம், காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “28-09-2023 முதல் 15-10-2023 வரை வினாடிக்கு 3,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட காவிரி நடுவர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அப்படி நீரை முழுமையாக கர்நாடா திறந்துவிட்டிருந்தால் பிலிகுண்டுலுவில் 4.15 டிஎம்சி நீர் நமக்கு வந்திருக்கும். ஆனால் இதுவரை 3.15 டிஎம்சி நீர்தான் வந்துள்ளது. இன்னும் வர வேண்டிய தண்ணீர் 1.5 டிஎம்சி நீர் இது குறித்து நாம் பேசுவோம்” என்றார்.
காவிரி பிரச்னையில் ஆளும் தி.மு.க. அரசு நாடகமாடுகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறாரே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி முடிவதற்குள் காரில் அமர்ந்தபடியே இரு கைகளையும் கூப்பி, “பெரியவங்க… அடியேன் சின்ன பையன்…எங்க கிட்ட கேள்வி கேட்கிறீங்களே” என தனக்கே உரித்தான கிண்டல் பாணியில் பதிலளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் துரைமுருகன்.