காவிரி நீர்: கர்நாடக அரசுக்கு கண்டனம்… நாளை அனைத்து கட்சி கூட்டம்!

முதலமைச்சர் முக ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின்
Published on

தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க முடியாது என்று கூறிய கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு 12 முதல் 31 ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் நேற்று முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் அவரின் அறிக்கை:

“தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழகத்துக்கு பில்லி குண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு ஒழுங்கற்று குழு ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும்.

இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD-யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், ஒழுங்கற்று குழு ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

இவ்வாறு, தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது.

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன்.

இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com