காவிரி விவசாயிகள்
காவிரி விவசாயிகள்

சூடாகும் காவிரி விவகாரம்... டெல்டா விவசாயிகள் எடுத்த முடிவு!

Published on

காவிரியில் ஒழுங்காற்றுக் குழு ஆணையிட்டும் தண்ணீர் விடமுடியாது என மறுக்கும் கர்நாடகத்தின் நிலை தொடர்கிறது. 

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கடந்த ஆண்டு கர்நாடக அரசு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறக்காமல் சுமார் 99 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் உள்ளதாலும், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சியும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சியும் கர்நாடகம் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை சுமார் 5 டிஎம்சி தண்ணீரைத்தான் அம்மாநிலம் திறந்துவிட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்போது கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பியுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை உட்பட அனைத்து அணைகளிலும் 85 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்குமுன் கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால், இதை ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் இராமதாசு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமா ஆகியோர் கர்நாடக அரசின் இம்முடிவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஆனாலும் கர்நாடக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லாததால், முக்கிய விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க முடிவுசெய்துள்ளன.

”காவிரியில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வலியுறுத்தியும். வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்தும் வரும் 16ஆம் தேதி அன்று காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நடத்தப்படும்.” என்று சிபிஎம் சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்  சாமி. நடராஜன், சிபிஐ சார்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி இருவரும் அறிவித்துள்ளனர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com