கனடாவில் வேலை.... காத்திருப்பது கண்ணீரா? வெறுங்கனவா?

கனடாவில் வேலை.... காத்திருப்பது கண்ணீரா? வெறுங்கனவா?

Published on

திரைப்படங்களில் வெளிநாட்டு மாப்பிள்ளை என்று ஆடம்பரமாக ஒருவரைக் காட்டுவார்கள்.வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் எல்லாருமே ஒயிட் காலர் ஜாப் பார்ப்பதில்லை . பெரும்பாலும் உடலுழைப்புத் தொழிலாளர்களாகக் கடினமான பணியை மேற்கொள்கிறார்கள். வெளிநாடுகளில் கண்காணாத தேசத்தில் எப்படிப்பட்ட வேலையையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.அவர்களைக் கேட்டால் உள்ளூரில் எவ்வளவு உழைத்தாலும் பத்தாயிரம் ரூபாயைக்கூட முழுதாகப் பார்க்க முடியாது என்பார்கள்.அதற்காக எவ்வளவு சிரமத்திற்கும் தயாராகி வெளிநாடு செல்லும் முயற்சியில் இறங்குகிறார்கள்.அங்கே அவ்வளவு அசெளகரியங்களையும் சகித்துக் கொண்டு சம்பாதித்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

 தமிழகத்திலிருந்து முன்பெல்லாம் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள்  செல்வதுண்டு.

 மற்ற நாடுகளை விட ஒப்பிடும் போதுகுறைந்த செலவில் செல்வதாக நினைத்து தமிழகத்தில் இருந்து  அடித்தட்டு ஊழியர்கள் பலரும்  மலேசியா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகள்  செல்வதுண்டு.மத்திய தரைக் கடல் நாடுகளில் பணிச்சுமையும் அதிகம் சம்பளமும் குறைவு.

 இப்போது இந்த மோகம் குறைந்து வெளிநாட்டில் வேலை தேடும்  நண்பர்களின் முக்கிய விருப்பத் தேர்வாகக் கனடா இருந்து வருகிறது.  ஆனால் இப்பொழுது அங்கே நிகழும் கட்டுப்பாடற்ற குடியேற்றத்தாலும்,  தற்கால  அரசியல் சூழ்நிலைகளாலும்,  வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது.  தங்குவதற்கு வீடு கிடைப்பது மிகச் சிரமமாக உள்ளது. தாறுமாறான அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மிகப்பெரும் சவாலாக உள்ளது.

பெரும்பான்மையான நபர்கள்  சுற்றுலா விசாவில் வந்து,  கனேடிய குடிநுழைவு சோதனைச் சாவடியில் அகதிகளாகச் சரணடைகிறார்கள்.  இது ஒரு குறுக்கு வழியிலான குடிநுழைவு முறையாகும்.  இதன் மூலம் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும். 

அண்மையில் இளங்கலை பொறியியல் முடித்த இரண்டு  இளைஞர்கள்  அகதிகளாகச் சரணடைந்து வேலை தேடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.

கணினியியல், மருத்துவம், பொறியியல்  மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கனடா போன்ற வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைப்பது உண்மைதான்.  ஆனாலும் கனடாவில் மிக அதிக வருமான வரி, மோசமான  விலைவாசி   உயர்வு (100 கிராம் கறிவேப்பிலை சுமார் 4டாலர்கள்; இந்திய மதிப்பில்  250 ரூபாய்),  கடுமையான வீட்டு வாடகை உயர்வு  போன்ற காரணங்களால் சம்பளத்தின் பெரும்பகுதி செலவாகிவிடும்.

பொதுவாக இவ்வாறு வரும் அகதிகள்,  பெரும்பான்மையாகக் கடைநிலை ஊழியர்களாகப் பணியில்  அமர்த்தப்படுகிறார்கள்.  அவ்வாறான வேலைகளும் தற்போது கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. அகதிகளுக்கான மறுவாழ்வுத் தொகையாக மாதந்தோறும் 750டாலர் ஒரு சில மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

 இப்படிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தில் பல இடைத்தரகர்கள் கொழுத்த காசு பார்க்கிறார்கள். அதனால் சுமார் 100 டாலரில் இருந்து 229 டாலர் வரை (இந்திய மதிப்பில் ருபாய் 6000 முதல் ருபாய் 14000வரை) மட்டுமே செலவாகக் கூடிய ஒரு சுற்றுலா விசாவுக்கு சாதாரணமாக ரூபாய் 5லட்சம் முதல், 33 லட்சம் ருபாய்  வரை செலவு செய்து இங்கு வருகிறார்கள்.  குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை  மாவட்டங்களில் இருந்து  இங்கே வந்து அதிக அளவில் அகதிகளுக்கான குடிநுழைவில் பதிவு செய்கிறார்கள்.

அவ்வாறாக அகதிகளாகச் சரணடையும்போது தங்களது பாஸ்போர்ட்டை  ஒப்படைக்க வேண்டும்.

இப்படித் தங்களை அகதிகளாக அறிவிக்க இடைத்தரகர்கள் சில டெம்ப்ளேட் காரணங்களை கூறச் சொல்வார்கள். தாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதனால் ஊரில் தங்களுக்கு கொலை மிரட்டல்  உள்ளது என்றோ,  ஒரு பெண்ணை  ஜாதி மாறிக் காதலித்ததாகவும் ஆகவே கொலை செய்யத் துரத்தப்படுகிறோம் என்றோ,அரசியல்வாதிகளின் கூலிப்படையால் துரத்தப்பட்டு தப்பித்து வந்து விட்டோம் என்றோ கூறச்சொல்வார்கள்.மொத்தத்தில் உயிர் பயத்தில் தப்பித்து வந்து விட்டோம் என்று கூறச் சொல்வார்கள்.இப்படிப்பட்ட காரணங்களைத் தான் அவர்கள்  அனுதாபத்துக்குரியதாக சட்ட பூர்வமாக எடுத்துக் கொள்கிறார்கள்.ஓரினச்சேர்க்கைக்கான ஆதரவுக் குரல் இந்தியாவில் எழுந்து வரும் நிலையில் அந்தக் காரணமும் இனி செல்லுபடியாகாமல் போய்விடலாம்.

இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளில் உலகம் முழுவதும் ஆண்டுக்கு இப்படி 60 ஆயிரம் பாஸ்போர்ட்டுகள்  அகதிகளுக்கான அங்கீகாரம் கோரும் விண்ணப்பத்துடன்  ஒப்படைக்கப்படுகின்றன. அப்படிச் சரண் செய்த பிறகு  அவர்கள் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.நினைத்துப் பார்த்தால் கொடுமையாக இருக்கும் தங்களுக்கான சொந்தமாக ஒரு நாடு இருந்தும் நாடற்றவர்கள் ஆகிவிடுவார்கள். இவ்வாறான  அகதிகளுக்கான வழக்கு பெரும்பாலும் 1 முதல் 2 ஆண்டுகள் வரை நடக்கும். வழக்கை நடத்துவதற்கு குறைந்தது 6000 டாலர் முதல் 7500 டாலர் செலவு செய்ய வேண்டும். வழக்கின் முடிவில் அவர்களுக்குப் பெரும்பான்மையாக நிரந்தர வாசம் வழங்கப்பட்டாலும், அவர்களுக்கு அகதிகளுக்கான நாடற்றவர்களுக்கான, தாய்நாட்டைத் தவிர மற்ற நாடுகளுக்கு மட்டுமே பயணம் செல்லத்தக்க கடவுச்சீட்டு (Travel Document) வழங்கப்படும். அதனைக்கொண்டு அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் செல்ல இயலாது. 

பாஸ்போர்ட்டுகள் ஒப்படைக்கப்பட்ட பிறகு வழக்கு முடியும் வரை எந்த அவசர கால சூழ்நிலையிலும் தாங்கள் இந்தியாவிற்கு  திரும்புவது  எளிதான காரியம் இல்லை. மீறி இந்தியாவிற்குப் பயணம் செய்தால் கனடாவிற்குத் திரும்ப இயலாது. மேலும் இந்தியாவிலும் வழக்கைச் சந்திக்க நேரும். 

தற்போதைய சூழலில் வேலை தேடும் நண்பர்கள் தங்களது தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலையை இந்தியாவிலேயே தேர்ந்தெடுங்கள்.  அதே துறையில்  நிபுணத்துவம் பெற்ற பிறகு,  அதே துறையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பைத் தேடுங்கள்.  

 பெற்றோர்களே, தங்களது மகனோ மகளோ,  படித்து முடித்த பிறகு அதே துறையில் அனுபவம் பெறுவதற்காக  இந்தியாவிலேயே வேலையைத் தேடச் செய்யுங்கள்.  உறவினர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள் என்பதற்காக  அளவுக்கு மீறிய கடனை வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காதீர்கள்.

 ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.  படித்த துறையில் வேலையைத் தொடங்கும் போது வருமானம் மிகக் குறைவாக இருக்கலாம்.  ஆனால் நீண்ட கால நோக்கில்,  அனுபவம் மற்றும்  திறமை மேம்படும் போது,  சம்பளம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும். 

 நண்பர்களே, திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது நமது முதுமொழிதான். ஆனால் அதற்காகக் குறுக்கு வழியைத் தேர்வு செய்து வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். நல்ல, நீண்டகால எதிர்காலமுள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்து முறையான பயிற்சி பெற்று சிறப்பான வேலைவாய்ப்பை இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ பெற வாழ்த்துக்கள். சிந்தித்துச் செயல்படுங்கள்.

(அமுதன் கௌதம், கனடாவில் பணிபுரிகிறார்)

logo
Andhimazhai
www.andhimazhai.com