சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணி
சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணி

பட்ஜெட்2024: தமிழ்நாட்டின் கோரிக்கைகள் நிறைவேறியதா?

Published on

மத்திய பட்ஜெட் உரையில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும், நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ’3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோல் ரயில் திட்டத்திற்கு நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல், உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டிருந்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு, சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் 60% பணிகள் நிறைவேறிய நிலையில் கூட மத்திய அரசு இதுவரை நிதிஒதுக்கவில்லை. வெளிச்சந்தையில் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கி தமிழாடு அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட வழங்கவில்லை.’ என்று குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், 2024 - 25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பெரும்பாலும் நிதி ஒதுக்கவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தாம்பரம் - செங்கல்பட்டு வரையிலான மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கவில்லை. கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்படவில்லை.

நாராயணன் திருப்பதி, பாஜக மாநிலத் துணைத்தலைவர்
நாராயணன் திருப்பதி, பாஜக மாநிலத் துணைத்தலைவர்

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம், ’இது மாநில அரசின் திட்டம். இதற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் கொடுக்கவில்லை என என மெட்ரோ ரயில் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். இது முழுக்க மாநில அரசின் திட்டம்.

மெட்ரோ ரயில் அலகு 1 பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து, அதற்கு நிதியும் கொடுத்தது. ஒப்புதல் கொடுக்கப்படதா இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எப்படி பணம் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒப்புதல் வேண்டுமானால் கேட்கலாம்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக முதல் கொடுத்த திட்ட அறிக்கைக்கும் இப்போதுள்ள திட்ட அறிக்கைக்கும் குழப்பம் உள்ளது. ஆனாலும், மெட்ரோ ரயில் பணிக்கான நிதியை மத்திய அரசு நிதி கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த குழப்பங்களை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுடையது.” என்று அவர் கூறினார்.

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் கூடுதலாக 3 கோடிகள் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அறிவிப்பு, வருமான வரி நிலையான கழிவு மாத சம்பளம் ரூ. 50 ஆயிரத்திலிருது ரூ. 75 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுவானவையாகும்.

இந்த பட்ஜெட் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும் இல்லையே!.... நிதியமைச்சரே வழக்கமாக மேற்கோள் காட்டும் திருக்குறளும் இல்லையே!’ என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com