மத்திய அமைச்சர்கள் நிர்மலா, ஜெய்சங்கர் ஏன் போட்டியிடவில்லை?- காங்கிரசுக்கு பா.ஜ.க. பதில்!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
Published on

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும் ஜெய்சங்கரும் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லையென தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

” ஏன் நிர்மலா சீதாராமன் திருச்சியில் நிற்கவில்லை? ஏன் ஜெய்சங்கர் தென் சென்னையில் நிற்கவில்லை? வெயிலில் சுத்துவதற்கும், களப்பணியில் இருப்பதற்கும் விளிம்பு நிலை மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் எந்த வித சிரமமும் இல்லாமல் அனுபவிப்பதற்கு ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும். இதற்கு பாஜக தெளிவான பதிலை மழுப்பாமல் சொல்ல வேண்டும். சமூக நீதி எந்த அடிப்படையில் பாஜகவில் இருக்கிறது, இயற்கை எந்த அளவில் பாஜகவில் இருக்கிறது என்பதை சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.

திருப்பதி நாராயணன்
திருப்பதி நாராயணன்

மாநிலங்களவை உறுப்பினர் மன்மோகன் சிங்கை பிரதமராகவே கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு இது போன்று பேசுவதற்கு அருகதை உள்ளதா? செல்வ பெருந்தகைக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் புரியவில்லை என்பதே உண்மை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 9 வேட்பாளர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை என்பது அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரியாதா? பிராமண சமுதாயத்தின் மீது வெறுப்பை உமிழும் செல்வப்பெருந்தகை, அந்த வெறுப்பின் காரணமாகத்தான் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறாரா?

அமெரிக்கை நாராயணன், எஸ்.வி.ரமணி, பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மணிசங்கர் ஐயர் போன்ற பிராமண தலைவர்களை ஏன் காங்கிரஸ் கட்சி போட்டியிட அனுமதிக்கவில்லை என்பதற்கு விளக்கமளித்து விட்டு, பின்னர் பாஜகவை கேள்வி கேட்கட்டும் செல்வப்பெருந்தகை. பாஜகவில் ஐந்து பட்டியலின சமுதாய வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில், ஐ ஏ எஸ் அதிகாரியாக அரசு பணியாற்றிய சசிகாந்த் செந்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் பட்டியிலன வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நெடுங்காலமாக பணியாற்றிய பட்டியிலன தலைவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியில் இப்போது இல்லையா? இது தான் சமூக நீதியா?

தி மு க, காங்கிரஸ். விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பிராமணர்களை தேர்தல் அரசியலில் ஒடுக்கப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதும் நிலையில், அச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொல்வது அந்த சமுதாயத்தின் மீதான செல்வப்பெருந்தகையின் உச்சக்கட்ட வன்மம்.

'நான் ஒரு கவுல் பிராமணன்' என்று மார் தட்டிக்கொண்ட ராகுல் காந்தி மீது அதே வெறுப்பை உமிழ்வாரா செல்வப்பெருந்தகை? காங்கிரஸ் கட்சியே பிராமணர்களால் வளர்க்கப்பட்ட கட்சி தான் என்ற வரலாறு, அக்கட்சிக்கு புதிதாய் காங்கிரசுக்கு வந்த செல்வப்பெருந்தகைக்கு தெரியாததில் வியப்பில்லை.

சமூக நீதி பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என்பதை செல்வப்பெருந்தகை அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் வார்டு கவுன்சிலர் துவங்கி அமைச்சர்கள் வரை பிராமணர்கள், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இருக்கும் ஒரே கட்சி பாஜக தான் என்பதை செல்வப்பெருந்தகை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 234 சட்டசபை தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி ஒரு பிராமணரையாவது வேட்பாளராக நிறுத்தியுள்ளதா? காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் இல்லையா அல்லது பிராமணர்கள் மீதான வெறுப்பா? துணிவிருந்தால் காங்கிரஸ் பிராமணர்களுக்கு எதிரான கட்சி என்று செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிடுவாரா?

'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்ற சொல்லுக்கேற்ப, ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் சுகத்துக்காக ஜாதிகளுக்கிடையே எழும் பிரச்சினைகளை ஊதி ஊதிப் பெரிதாக்கி அனைத்திற்கும் பிராமணர்கள் தான் காரணம் என்பது படுகேவலமான அரசியல் பிழைப்பு அல்லவா?

தமிழகத்தை பொறுத்தவரை ஜாதியும், அரசியலும் பிரிக்க முடியாதவை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சமுதாயம் மதிக்கப்படமாட்டாது என்பது தமிழக அரசியலின் எழுதப்படாத விதி. அதைப் புரிந்து கொண்டு தான் கடந்த 25 வருடங்களாக ஒரு சில விதிவிலக்குகளை தவிர பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களை இரு பெரிய அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பைத் தவிர்த்து வந்தன. குறிப்பாக தி மு க வின் தற்போதைய கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தில் வெறியோடும், வெறுப்போடும் இருந்து கொண்டிருப்பது கண்கூடு.

ஜாதியை ஒழித்துவிட்டதாக கூறிக்கொண்டு ஜாதிய அரசியலை மட்டுமே வெறி பிடித்து பின்பற்றிக்கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், பிராமணர்களால் துவக்கப்பட்ட, வளர்க்கப்பட்ட காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும் பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் ஓலமிடுவது அரசியல் அற்பத்தனம்.

ஜெயலலிதா என்ற பிராமண பெண்மணியை 'அம்மாவாக' கொண்டாடும் அ தி மு க வும் ஒரு பிராமண வேட்பாளரை கூட நிறுத்தாதது தற்போதைய தலைமையின் அச்சமுதாயத்தின் மீதான வெறுப்பை உணர்த்துகிறது.

பாஜகவில் கூட ஒரு பிராமண வேட்பாளர் இல்லாதது மேலெழுந்த வாரியாக ஒரு சிலருக்கு உறுத்தலாக இருந்தாலும் கூட, பாஜகவில் மட்டுமே அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரியும் சூழ்நிலையை, சந்தர்ப்பத்தைப் பெறமுடியும்.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com