பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும்! – சீமான் ஆவேசம்

சீமான்
சீமான்
Published on

மக்களவைத் தேர்தல் முடிந்ததும் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை எதிர்த்து வழக்குத் தொடருவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் முந்தைய தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில், இந்த முறை அந்த சின்னம் அவர்களுக்கு கிடைக்காது என கூறப்படுகிறது. ஏனென்றால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சீமானின் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியுள்ளது. மேலும் எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை நீதிபதி தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது:

”சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் வெள்ள பாதிப்பு நிவாரண பணியில் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று பரப்பியது விவசாய சின்னம். அந்த சின்னத்தை வட மாநிலத்தில் பெரிய கட்சிக்கோ, அமைப்புக்கோ எடுத்து கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஒரு கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டி போட்டு இருக்கிறார். 71 வாக்கு வாங்கியிருக்கிறார்.

நான் 6 தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். 7 விழுக்காடு வாக்கு வாங்கியிருக்கிறேன். இந்த முறை கொடுத்தால் அங்கீகாரம் பெற்றிருப்பேன். ஏன் சின்னத்தை தூக்கினீர்கள். நாங்கள் போராடி மக்களிடம் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் போது மற்றொருவரிடம் கொடுக்கிறீர்கள்.

என் வாக்கு சதவிகித்தை குறைக்கவே இப்படி செய்கிறார்கள். பா.ஜ.க. தலைமைக்கு இதற்கும் தொடர்பு இல்லையா? தேர்தல் தேதியே அறிவிக்காமல் சின்னம் ஏன் கொடுத்தீர்கள். பொதுக்குழு நடத்தி, வரி கட்டாத கட்சிக்கு எதற்காக சின்னத்தை ஒதுக்க வேண்டும். இது அநீதி. நான் முதலில் மயில் சின்னம் கேட்டபோது தேசிய பறவை என்றார்கள். நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை முதலில் ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் வழக்குப் போடுவேன்.

தமிழ்நாட்டில் ஒரே காட்சி நாம் தமிழர் கட்சிதான். 40 தொகுதிகளில் போட்டியிடுவேன்.” என்று சீமான் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com