கர்நாடக மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண நிதியுடன், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட மிக்ஜம் புயல் நிவாரண நிதியை ஒப்பிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், அதனால் தங்கள் மாநிலத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக வழங்குமாறு அம்மாநில முதலமைச்சர் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்துக்கு ரூ. 3454 கோடியை வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என 3454 கோடி அறிவிப்பு.
தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ 38,000 கோடி.
பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம்… தீராத வன்மம்.” என கடுமையாக விமர்சித்துள்ளார்.