பாஜக மாநில ஊடக பொறுப்பாளர் கைது!

கைது செய்யப்பட்ட பிரிவின் ராஜ்
கைது செய்யப்பட்ட பிரிவின் ராஜ்
Published on

பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடக பொறுப்பாளர் எஸ் பிரவின்ராஜ் கரூர் சைபர் கிரைம் போலீசாரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்து காளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன் என்பவரது மகன் எஸ். பிரவீன் ராஜ். இவர் பாஜக மாநில ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடி தொடர்பில் இவர் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.

இவர் சமூக ஊடகங்களில் காங்கிரஸ், திமுக கட்சிகளை விமர்சித்து வந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா குறித்தும் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் கரூர் சைபர் கிரைம் போலீசார் பிரவின் ராஜை நள்ளிரவு கைது செய்து கரூர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில், “கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கொடுத்த புகாரில் , ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி அவர்களின் வீடியோவை எடிட் செய்து ஆபாசமாக வெளியிட்டு,அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ.டி விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்....

அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக ஒருவரை விமர்சிக்கலாம்...ஆனால், ஒரு அண்ணன், தங்கையை அரசியலில் ஈடுபடுகிறார்கள்,பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்பதாலேயே அறுவெறுக்கத்தக்க வகையில் பதிவிடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜகவின் ஆபாச,வெறுப்பு அரசியல் தமிழ் சமூகத்திற்கே மிகப்பெரிய அவமானம். இன்று பிரியங்கா காந்தி நாளை நமது வீட்டுப் பெண்கள். இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை ஆபாசமாக ,அறுவெறுக்கத்தக்க வகையில் விமர்சிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டிராது. இனிமேலாவது பாஜகவினர் இதுபோன்ற ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க அரசியலை கைவிட்டு தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com