பா.ஜ.க கூட்டணியில் இப்போது அ.தி.மு.க. இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் நிலை நீடித்து வந்த நிலையில், அவர் இன்று இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “அ.தி.மு.க சிங்கக் கூட்டம். அதைப் பார்த்து சிறுநரி அண்ணாமலை ஊளையிடுகிறார். இந்த சிறு நரி தனியாக போய் நிற்கட்டும். நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலை ஓட்டு வாங்குவார்.” என்றார்.
மேலும், பெரியார், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி பற்றி உங்களுக்கு பேச என்னத் தகுதி இருக்கிறது. கூட்டணிக் கட்சியை விமர்சனம் செய்துவிட்டு தன்னை முன்னிலைப்படுத்த அண்ணாமலை நினைத்தால், அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பலமுறை எச்சரித்தோம். இதோடு நிறுத்து என்று. இனி அ.தி.முக. ஐடி-விங் அண்ணாமலையை தாறுமாறாக விமர்சனம் செய்யும். அவரை திருத்துங்கள் என்று மேலிடத்திலும் சொல்லியாகிவிட்டது.
எங்கள் தலைமையிலான கூட்டணியிலிருந்து கொண்டு, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளக் கொள்ள வேண்டுமா. உங்களுக்கு சொம்பு தூக்க அவசியம் என்ன இருக்கிறது. அதற்கு அவசியமே கிடையாது. நீங்கள் யார் மீதாவது சுமந்துதான் செல்லவேண்டும். அண்ணாமலைக்குக் காலே கிடையாது. பா.ஜ.க. இங்கே காலூன்ற முடியாது. எங்களை வைத்துத்தான் உங்களுக்கு அடையாளமே.
கூட்டணி பொறுத்தவரை இல்லை. பா.ஜ.க கூட்டணியுடன் அ.தி.மு.க இல்லை. இதுதான் கட்சியின் நிலைப்பாடு. கூட்டணி தொடர்பாக தேர்தல் வரும் போதுதான் முடிவு எடுக்கப்படும். பா.ஜ.க. வேஸ்ட் லக்கேஜ் இல்லை; ஓவர் லக்கேஜ்.
எந்த பூச்சாண்டிக்கும் அதிமுக பயப்படாது. எத்தனையோ கோப்புகளை பார்த்தவர்கள் அதிமுக தலைவர்கள். ” என்றார்.