அண்ணாமலை - அண்ணா - ஜெயக்குமார்
அண்ணாமலை - அண்ணா - ஜெயக்குமார்

அண்ணாவைப் பற்றி அண்ணாமலை என்ன பேசினார்? - பா.ஜ.க.- அ.தி.மு.க. மீண்டும் மோதல்!

Published on

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்துப் பேசிய நிலையில், இன்று மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக விவரித்தார்.

அப்போது, “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒரு தமிழ் மாநாடு பத்து நாள்கள் நடைபெற்றது. நான்காவது நாள் கூட்டத்தில் பி.டி.ராஜன் பேசுகிறார். நிகழ்வின் அழைப்பிதழில் பெயரே இல்லாத அண்ணாதுரையை அவர் அழைத்துக்கொண்டு போகிறார். அப்போது மணிமேகலை என்ற பெண், சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பாடுகிறார். உடனே மைக் எடுத்த அண்ணாதுரை, ’இந்த பெண் நன்றாகப் பாடியது. இதுவே கற்காலமாக இருந்திருந்தால் உமையவள் அவளின் பாலைக் குடித்துதான் இந்தப் பெண் பாட்டுப் பாடியதாக கட்டுக்கதை விட்டிருப்பார்கள். நல்ல வேளை பகுத்தறிவு வந்துவிட்டது; மக்கள் இதையெல்லாம் நம்பமாட்டார்கள்’ என்றார்.

அதையடுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அங்கு பேசுகையில், ‘சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் யார் உமையவள் பற்றி தவறாகப் பேசியது’ என்று கேட்கிறார். எல்லோரும் பம்முகிறார்கள்.” என்றும்,

”அண்ணாதுரையை மதுரைக்குள் ஒளித்துவைத்து விடுகிறார்கள். அவரால் வெளியே போக முடியவில்லை. அப்போது முத்துராமலிங்கத் தேவர் சொல்கிறார், ‘கடவுளை மறுப்பவர்கள் கடவுளைப் பற்றிப் பேசினால், மதுரை மீனாட்சிக்கு இனி ரத்தத்தில்தான் அபிஷேகம் நடக்கும்’ என்றார். மன்னிப்புக் கேட்டுவிட்டு பி.டி.ராஜனும் அண்ணாவும் ஓடிவந்தார்கள். ” என்றும் அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அண்ணாமலை அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால் மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அவர் கைவிடவேண்டும்.” என்றார்.

“உலக அளவில் சிறந்த தலைவரான அண்ணாவையே கொச்சைப்படுத்தும்வகையில் நடக்காத சம்பவத்தைப் பேசியுள்ளார். முத்துராமலிங்கத் தேவரும் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள். அண்ணாமலை எந்தப் புத்தகத்தில் படித்தார்? என்ன படித்தார்? திடீரென அண்ணாவைப் பற்றி தவறான கருத்தைக் கூறினால் அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளாது. அண்ணாமலைக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும்.”என்றும் ஜெயக்குமார் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com