இப்படி பண்ணிட்டாரே பவா செல்லதுரை?

பிக் பாஸ் மேடையில் நடிகர் கமல்ஹாசனுடன் பவா செல்லதுரை
பிக் பாஸ் மேடையில் நடிகர் கமல்ஹாசனுடன் பவா செல்லதுரை
Published on

‘பிக் பாஸ் சீசன் -7’ இல் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியானதும் பலருக்கும் ஆச்சரியம். முதல் முறையாகப் எழுத்தாளர் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருந்ததே அதற்குக் காரணம். சும்மா இருப்பார்களா சமூக ஊடகத்தினர்? எழுத்தாளரும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டியவருமான பவா செல்லதுரை பிக் பாஸில் கலந்து கொண்டது சரியா? தவறா? என்று பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்து பவாவை ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்வதை கடந்த சில நாள்களாக பார்க்க முடிகிறது. :

“நான் சொன்னதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கி எழுதுகிறேன். 80,90களில் வணிக சினிமா, வணிக இலக்கியம், வணிக எழுத்தாளர்கள் மேல் எல்லாம் கடுமையான தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தீவிர இலக்கியவாதிகள் அதனுடன் தொடர்பு வைத்துக் கொள்வது அருவெறுப்பாகக் கருதப்பட்டது. சுரா, க.நா.சு, பிரமிள், வெங்கட சாமிநாதன் போன்றவர்கள் இந்தப் போக்கின் முன் தளபதிகள். இன்று இருக்கும் பிரபல இலக்கிய எழுத்தாளர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களே. அன்று மிகப்பெரிய நட்சத்திரமான பாலகுமாரன் மீது பவா செல்லதுரை வைத்த கடும் விமர்சனங்கள் இன்னமும் அவர் ப்ளாக்கில் இருக்கிறது.

ஆனால், இவ்வரலாறு தெரிந்தவர்க்கு அந்த வணிக எழுத்தாளர்கள் கூட செய்யாத சமரசங்களைக் குட்டிக் கரணங்களை இவர்கள் செய்யும்போது நமக்கு ஒரு ஒவ்வாமை வருகிறது. அவ்வளவுதான். இந்தச் சூழலை, மதிப்பீடுகளை உருவாக்கியது வளர்த்தது இவர்கள்தான். இவற்றை இன்று புல் எனத் தாண்டிச் சென்றுவிட்டு ஏதேதோ சொல்லிச் சமாளிப்பவர்களும் இவர்கள்தான்.” என்று முகநூலில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் போகன் சங்கர்.

நேற்று பவா குறித்து கவிதாபாரதியின் முகநூல் பதிவுதான் வைரல். ”பிக் பாஸ் என்பது ஒரு பெருவணிக விளையாட்டு. அதற்கான வாய்ப்பை பவா நிராகரித்திருக்க வேண்டுமென்ற பதிவுகளைக் காணுற நேர்ந்தது. இந்த விளையாட்டில் இறங்குவதன் சாதக பாதகங்களை அறியாதவரல்ல பவா.கமல் என்னும் நன்மதிப்புகொண்ட நடிகர் தன் பிரபலத்தின் காரணமாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பைப்பெறுகிறார். அதனால் பொருளீட்டுகிறார், பாராட்டுப் பெறுகிறார் எனில் ஒரு எழுத்தாளர் தன் பிரபலத்தின் மூலமாகக் கிடைக்கும் வாய்ப்பை ஏன் நிராகரிக்க வேண்டும். புத்தகம் விற்று வாழ்க்கையை நடத்துவதற்கான சூழல் தமிழ் எழுத்தாளர்களுக்கு அரிது. எனவே எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தின் மூலம் கிடைக்கும் அறத்துக்குப் புறம்பற்ற எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவதில் ஒரு தவறுமில்லை. பவாவின் தேர்வை நான் ஆதரிக்கிறேன்.” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கே.என். செந்தில் பதிவு
எழுத்தாளர் கே.என். செந்தில் பதிவு

எழுத்தாளர் கே.என். செந்தில், “பிக் பாஸ் வீட்டில் பவா செல்லதுரையின் கதைகளை கேட்கப் போகும் சக போட்டியாளர்கள்.” என்று பதிவிட்டு, காரிலிருந்து தலைகீழாக விழும் நபரின் போட்டோவைப் பகிர்ந்து கிண்டலடித்துள்ளார்.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், “எல்லாவற்றையும் அநியாயத்துக்குப் புளுகும் மிகையுணர்ச்சிச் சுரண்டல் கேளிக்கைவாதி பவா செல்லதுரைக்கு மிகப் பொருத்தமான வேடம் பிக்பாஸ் நடிகராக வாழ்வது. அன்றாட வாழ்க்கை போல வேஷம் கட்டும் நடிக-நடிகையரால் ஆன டெய்லர் மேட் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சி பிக்பாஸ்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்றைய பிக்பாஸில், ஆதவன் எழுதி, வசந்த் இயக்கிய "ஓட்டம்" சிறுகதையை பவா செல்லதுரை சொற்பொழிய கேட்டேன். வஞ்சகமும், படோடாபமும், காய்நகர்த்தலும் நிறைந்த பிக்பாஸ் கூடாரத்தில் இன்று ஒரு பூ பூத்திருந்தது.- இது சுந்தர் ஷாலிநிவாஸ் பதிவு.

பிக்பாஸ் என்றாலே பிரச்னைதான். பவா உள்ளே போனதில் இருந்து இலக்கிய முகநூல் உலகமும் அதிர்கிறது. எவ்வளவு காலம் பவா தாக்குப் பிடிக்கிறார் என்று பார்ப்போம். எந்த பிரச்னை வந்தாலும் அதற்கு ஏற்றார்போல் ஒரு கதையை அங்கே அவிழ்த்து விட்டுவிட மாட்டாரா நம் கதைசொல்லி?

logo
Andhimazhai
www.andhimazhai.com