தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
Published on

கோடியக்கரை தென்கிழக்குக் கடலில்,மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் வேதாரணத்துக்கு அப்பால், நடுக்கடலில் மீன்பிடித்த போது, இலங்கைக் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கும் நபர்களால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள் நால்வர், இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், செல்வகிருஷ்ணன், தனசேகரன், ராஜகோபால் ஆகிய மீனவர்கள் நால்வரும் கண்ணாடியிழைப் படகு ஒன்றில் நேற்று கடலுக்குச் சென்றனர்.

கோடியக்கரைக்கு தென்கிழக்குக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைப் படகில் வந்த மூன்று பேர் தமிழக மீனவர்கள் இருந்த படகில் ஏறி தாக்குதல் நடத்தியதுடன், ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜி.பி.எஸ். கருவி போன்றவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நால்வரும் இன்று அதிகாலையில் கரை திரும்பினர். காயமடைந்த நால்வரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com