தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தும் 2024- ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் பட்டியிலின இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மாணவர்கள் கலந்தாய்வில் பங்குபெற அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதித்தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் நிறுவனர் தலைவர் அதியமான் முதலமைச்சருக்கு எழுதிய கடித விவரம்:
”நடப்பாண்டில் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தும் 2024- ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் SC பட்டியிலின இட ஒதுக்கீட்டில் SCA (அருந்ததியர்) மாணவர்கள் கலந்தாய்வில் பங்குபெற அனுமதிக்கவில்லை,
SC மாணவர்களுக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களுக்குள் அருந்ததிய மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் இருந்தால்,SCA அருந்ததிய மாணவர்கள் SC இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் கலந்துகொள்ள உரிமை இருக்கிறது என அரசாணை 29.05.2009 தேதியிட்ட GO (MS) எண். 61, SC (அருந்ததியர்கள்) SC இடஒதுக்கீடு இடங்களின் கீழ் சேர்க்கை பெறத் தகுதியுடையவர்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் இதைக்கருத்தில் கொள்ளவில்லை,
2024 ஆம் ஆண்டுக்கான தகுதிப் பட்டியல் சரியாகத் தயாரிக்கப்படாததால், பல SCA (அருந்ததியர்கள்) மாணவர்கள், SC தகுதிப் பட்டியலில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.
இதனால் மருத்துவ கல்வி இயக்ககம் நடத்திய 2024 ஆண்டிற்கான கலந்தாய்வில் இம்முறையை அரசு கடைபிடிக்கவில்லை இதனால் அருந்ததிய மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது,
எனவே, SC பட்டியிலின இட ஒதுக்கீட்டில் SCA அருந்ததிய மாணவர்கள் 2024- இந்தாண்டிற்கான கலந்தாய்வில் இடம்பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.” என்று அதியமான் கேட்டுக்கொண்டுள்ளார்.