பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பெரம்பூரில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக ரவுடி திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்த போலீசார், இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 29 பேரை கைது செய்துள்ளனர். இதில் 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை நீலாங்கரை கால்வாயில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுக்க போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, அவர் நாட்டு துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டதில் காவல்துறை வாகனத்தின்மீது குண்டு பாய்ந்துள்ளது. தற்காப்புக்காக வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமலன் சுட்டதில் ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.
அவர் உடல் பிரேதபரிசோதனைகாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரின் உடலை பார்த்து கதறி அழுத அவரது மகள், "செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே" என கதறி அழுத வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.
ரவுடி சீசிங் ராஜா யார் ?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29வது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பர். இவர் மீது 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகள் உள்ளன.
திருவேங்கடத்தை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 2வது என்கவுண்டரில் சீசிங் ராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, இது மூன்றாவது என்கவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.