மேலும் பல பகுதிகளில் புயல் நிவாரணப் பணிக்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

‘மிக்ஜம்’ புயல் நிவாரணப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த கூடுதலாக அமைச்சர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு சில அமைச்சர்களை நியமித்து கடந்த 4ஆம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அவர்களுடன் மேலும் பல அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதன் விவரம்:-

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கே.கே. நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும்;

சுற்றுச்சூழல் - காலநிலைமாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கும்;

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ராயபுரம் பகுதிக்கும்;

ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி வில்லிவாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுடன் கூடுதலாக அரும்பாக்கம் பகுதிகளுக்கும்;

மேலும், சென்னை, எழிலகத்தில் உள்ள வருவாய் - பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுடன், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைத் திரட்டி மீட்புப் பணி மேற்கொள்வதற்காக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவையும் நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரை திருவொற்றியூர் பகுதிக்கு நியமித்து நிவாரணம் - சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com