அப்பாவு மரபைக் கடைப்பிடிக்கவில்லை: அ.தி.மு.க. குற்றச்சாட்டு!

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
Published on

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவை மரபை கடைப்பிடிக்கவில்லை என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கும்படி இதுவரை 10 முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால், எங்களது கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று பேரவை தலைவருக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "இருக்கை ஒதுக்கீடு என்பது எனது தனிப்பட்ட உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை. பதவி நீக்கம் தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது. உறுப்பினர்கள் எந்த கட்சியின் சின்னத்தில் வெற்றி பெற்று அவைக்கு வந்தார்களோ, அவர்களை அந்த கட்சியின் உறுப்பினர்களாகத்தான் நான் பார்ப்பேன்." என்றார்.

இதையடுத்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால், அ.தி.மு.க. உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாயநாகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.

”அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர் அல்லது முதலமைச்சரிடமிருந்துதான் பதில் வர வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு பேரவைத் தலைவர் பதில் அளித்துவிடுகிறார். அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் பதில் சொல்கிற வேலை இல்லாமல் போய்விடுகிறது. அதனால் எந்த பயனும் இல்லை. நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை அதனால் தீர்வுகாணப்படுவதில்லை. இந்த போக்கு தொடர்கிறது. பேரவைத் தலைவர் அவை மரபை கடைப்பிடிக்கவில்லை.” என்றார் எடப்பாடி பழனிசாமி.

அவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “சபாநாகயர் அப்பாவு சட்டமன்ற மரபுபடி நடந்துகொள்கிறார்” என்று பேட்டியளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com