செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மனைவி பெயரில் லண்டனில் சொத்து... செல்வப்பெருந்தகைக்கு பா.ஜ.க. செக்?

Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையிலான பகிரங்க வார்த்தை மோதல் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

சென்னை, சைதாபேட்டை நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை இன்று கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்தார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கின் மூலம் தி.மு.க.வையும் பாரதியையும் கடைசிவரை இழுக்கப்போவதாகவும் இதன்மூலம் அவர்கள் தவறாகப் பேசிவருவதை வெட்டவெளிச்சத்துக்குக் கொண்டுவர உள்ளதாகவும் கூறினார்.

மேலும், செல்வப்பெருந்தகை நேற்று கூறியபடி எந்த வழக்கையும் போடட்டும்; அப்படிச் செய்தால் அவரைப் பற்றி இன்னும் பல உண்மைகள் வெளியே வரும்; குறிப்பாக, ரிசர்வ் வங்கியின் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் அவர் மனைவியின் பெயரில் எப்படி சொத்து வாங்கினார், வேறு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன என்பன வெளிவரும் என்றும் அண்ணாமலை கூறினார்.

முன்னதாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, அண்ணாமலை தன்னை ரவுடி என அவதூறாகக் குறிப்பிட்டதாகவும், இதுவரை அண்ணாமலை பேசிவந்ததை காந்தியவழியில் மன்னித்ததாகவும் இனி அப்படி விடப்போவதில்லை என்றும் தான் நினைத்தால் அண்ணாமலை மீது 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார் அளித்து உள்ளே தள்ளமுடியும் என்கிறபடியும் குறிப்பிட்டார்.

இதன் பின்னணியில், முன்னதாக, செல்வப்பெருந்தகையை ரவுடிகள் பட்டியலில் இருந்தவர் என்றும் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்றும் கோவை ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது என்றும் அண்ணாமலை சாடியிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அவருடைய சாடலுக்கு முன்னர், சென்னை, சத்யமூர்த்திபவனில் கடந்த 8ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ஆருத்ரா தங்க வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட நபர்களை பா.ஜ.க.வில் சேர்த்துக்கொண்டனர்; அந்தக் கட்சியில் அதிகமாக ரவுடிகளைச் சேர்த்துக்கொண்டனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலடியாகத்தான் அண்ணாமலை செல்வப்பெருந்தகை மீதான வழக்கு விவரங்களைக் குறிப்பிட்டு அவர் மீது காட்டமாகப் பேசியிருந்தார்.

இன்று மீண்டும் செல்வப்பெருந்தகை என்ன வழக்கு வேண்டுமானாலும் போடட்டும்; அவற்றைச் சந்திக்கத் தயார் என அண்ணாமலை சவால்விடுத்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com