இந்த வாரம்... அண்ணாமலை வாரம்!? பா.ஜ.க.- அ.தி.மு.க., தி.மு.க. மாறிமாறி தாக்கு!

அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. தலைவர்
அண்ணாமலை, தமிழக பா.ஜ.க. தலைவர்
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இந்த வார அரசியல் பரபரப்பு நாயகன் எனப் பெயர் வைக்கலாம் என்கிற அளவுக்கு, அவரைச் சுற்றி பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

கடந்த 11ஆம் தேதி சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் அண்ணா, நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான பி.டி.ராஜன், பார்வர்டு பிளாக் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கம் ஆகியோரைப் பற்றிக் கூறியது சர்ச்சையாக ஆனது. குறிப்பாக, அண்ணாவைப் பற்றி அவர் கூறியது தவறு என அ.தி.மு.க.வினரே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு கட்டத்துக்கு மேல் போய், அண்ணாமலையின் பயணமே வசூல் பயணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து இன்று காலையில் தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அண்ணா இல்லாவிட்டால் அண்ணாமலை ஆடு மேய்க்கத்தான் போயிருக்க வேண்டும் என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதனிடையே, சி.வி.சண்முகத்துக்கு பதிலளிக்கும்வகையில் பேசிய அண்ணாமலை, தானோ தன் கட்சியினரோ கூனி குறுகி பதவிக்கு வரப்போவதில்லை என்றும் தாங்கள் அடிமைகள் இல்லையென்றும் பட்டும்படாமலும் பேசினார். இதே வார்த்தைகளைப் பயன்படுத்திதான், எடப்பாடி பழனிசாமி மீது தி.மு.க.வினர் கிண்டல்செய்துவந்த நிலையில், அண்ணாமலையின் இந்தப் பேச்சு அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார், கூட்டணியில் இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்; ஏற்கெனவே அவர் இப்படிப் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான் என்று குறிப்பிட்டார்.

அண்ணாமலையின் பதிலில், சி.வி.சண்முகம் பற்றி, அவர் மாலை 6 மணிக்கு முன்னால் ஒருமாதிரியும் பின்னால் ஒருமாதிரியும் பேசுவார் எனக் கூறியது, அ.தி.மு.க.வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஆனாலும், தன்னுடைய நேர்மையைக் கேள்விக்கு உள்ளாக்கினால் தானும் கடுமையாகப் பேசவேண்டி வரும் என்று அண்ணாமலை கூறினார்.

இந்த வாரம், அண்ணாமலை வாரம்போல அமைந்துவிட்டது என்பது மட்டும் உண்மை!

logo
Andhimazhai
www.andhimazhai.com