ஆட்சியர் முன்பே ரவுடிகள் அட்டகாசம் - தி.மு.க. மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆட்சியர் முன்பே ரவுடிகள் அட்டகாசம் - தி.மு.க. மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
Published on

பெரம்பலூரில் கல்குவாரி ஏலம் எடுக்க வந்தவர்களை ரவுடி கும்பல் தாக்கியதில் தி.மு.க. பின்னணியாகச் செயல்பட்டுள்ளது என பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரிகளுக்கு நடைபெற இருந்த ஏலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வந்த பெரம்பலூர் கவுல்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும் பா.ஜ.க. தொழில்துறை பிரிவு மாவட்டத் துணைத் தலைவருமான கலைச்செல்வன், தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் ஆகியோரை திமுக ரவுடி கும்பல் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், திமுகவினரைத் தடுக்க முயற்சித்த, கனிம வளத்துறை துணை இயக்குனர் ஜெயபால் மற்றும் உதவி புவியியலாளர் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் குமரிஆனந்தன் ஆகிய அரசு அதிகாரிகளையும், பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி திரு. பழனிச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

“மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து எச்சரிக்கை விடுத்த பிறகும், திமுக ரவுடி கும்பல் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர், அவரது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படும் அளவுக்கு ஏற்கனவே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே, அரசு அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமைக்கு, திமுகவினர் கொண்டு வந்துள்ளனர்.” என்றும்,

“மாவட்ட ஆட்சியருக்குக் கூட இந்த ரவுடி கும்பல் கட்டுப்படவில்லை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. உடனடியாக, ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுக ரவுடிகளைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com