தமிழிசை- அண்ணாமலை
தமிழிசை- அண்ணாமலை

தமிழிசையைச் சந்தித்தார் அண்ணாமலை- கிண்டல்செய்யும் வலைவாசிகள்!

Published on

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் தலைவரான தமிழிசையை அவரின் வீட்டில் சந்தித்துப் பேசினார். 

கடந்த 12ஆம் தேதி ஆந்திரப்பிரதேச அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மைய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசையைக் கண்டித்து ஏதோ சொன்னார். அவர் பதில்கூற முற்பட்டபோதும் அதை நிராகரித்து அமித் ஷா மேலும் கண்டிப்பாகச் சொன்னார்

இவ்வளவு கடுமையாக அமித் நடந்துகொண்டதற்குக் காரணம், அண்ணாமலையைப் பற்றி தமிழிசை பொதுவெளியில் குறைகூறியதுதான் என்று கூறப்படுகிறது. அதாவது, தான் மாநிலத் தலைவராகப் பதவிவகித்த காலத்தில் குற்றவாளிகளையெல்லாம் கட்சியில் சேர்த்ததில்லை; இப்போது அப்படியில்லை என்கிறபடி தமிழிசை பேசியது, பா.ஜ.க.வில் மட்டுமல்ல, அரசியல் தளத்திலேயே அதிர்வலைகளை உருவாக்கியது. 

அமித் நடந்துகொண்டது தொடர்பாக சென்னைக்குத் திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில்கூறாமல் சென்றுவிட்டார். ஆனால் சமூக ஊடகங்களில் இது தீயாயப் பேசப்படவே, வேறு வழியின்றி தன்னிலை விளக்கத்தை அளித்தார், தமிழிசை. 

அதைத் தொடர்ந்து, இன்று சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டிற்குச் சென்று அண்ணாமலை அவரைச் சந்தித்துப் பேசினார். 

சந்திப்பு குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தகவலையும் வெளியிட்டுள்ளார். அதில், “ இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், @BJP4Tamilnadu மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி @DrTamilisai4BJP அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி @DrTamilisai4BJP அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது.” என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.  

வலைவாசிகள் இதன்பிறகும் இருவரையும் வறுத்தெடுத்து கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com