என்ன அநியாயம் இது... டாஸ்மாக் கடைகளில் 2 விற்பனை மையங்களா?

tasmac shop
டாஸ்மாக்
Published on

தமிழ்நாட்டில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் கூடுதலாக மது வணிகம் நடைபெறும் 3500-க்கும் கூடுதலான டாஸ்மாக் மதுக்கடைகளில் இரண்டாவது விற்பனைக் கவுண்டரை  திறக்க டாஸ்மாக் நிர்வாகம்  முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 

மது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்துடன்  டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

”தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 4775 மதுக்கடைகள்  செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 3500-க்கும் கூடுதலான கடைகளில், அதாவது  கிட்டத்தட்ட 75% கடைகளில் தினமும் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக மது விற்பனையாகிறது என்பதே தமிழகத்தின் சீரழிவுக்கு எடுத்துக்காட்டு தான். இவற்றில் பல கடைகளில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று விற்பனைக் கவுண்டர்கள் இருந்தாலும் கூட மாலை நேரங்களிலும் தீப ஒளி போன்ற விழாக்காலங்களிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை என்பதால் கூடுதலான இன்னுமொரு கவுண்டரை திறக்க டாஸ்மாக் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.” என்று தனக்கு வந்த தகவலை அன்புமணி தெரிவித்துள்ளார். 

மேலும், ”மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் கூடுதலான நியாயவிலைக் கடைகள் உள்ளன. வெளிச்சந்தையில்  உணவுப் பொருட்களை வாங்க ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து எந்த கவலையும் கொள்ளாத தமிழக அரசு, மதுக்கடைகளில் ஒரு சில நிமிடங்கள் கூட வாடிக்கையாளர்கள் காத்திருக்கக் கூடாது என்று நினைத்து  கூடுதல் கவுண்டர்களை திறக்கிறது என்றால் அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது. வருவாய் கொடுத்து வாழ வைக்கும் மது வாடிக்கையாளர்கள் நலனை அரசு எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பதற்கு இதுவே சான்று.” என்றும் அவர் இடித்துரைத்துள்ளார். 

”ஏற்கெனவே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறப்பதென்பது மது வணிகம் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்களை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, படிப்படியாக மதுக்கடைகளை மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com