இலங்கை பிடியில் 162 மீனவர்கள்; 192 படகுகள்… அன்புமணி போராட்டம் அறிவிப்பு!

Anbumani Ramadoss
அன்புமணி
Published on

மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கை விவரம் வருமாறு:

“வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களின் மீதான சிங்கள கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பலநேரங்களில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதை சிங்கள கடற்படை, வழக்கமாக வைத்திருக்கிறது. சிங்கள கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேரை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் விடுதலை செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழ்நாடு மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 162 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களைக் காக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் கடமையை முடித்துக் கொள்கிறது. எனவே, இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய வேண்டும். இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 192 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசையும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய, மாநில அரசுகளையும் வலியுறுத்தி அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் பா.ம.க. சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com