கொசு ஒழிப்பு... ‘நீ விளையாடு நண்பா!’- உதயநிதி, அன்பில் மகேஷ் ட்விட்டர் விளையாட்டு!

உதயநிதி செய்த கொசுவர்த்தி சுருள் ட்வீட்
உதயநிதி செய்த கொசுவர்த்தி சுருள் ட்வீட்
Published on

கொசுவை ஒழிப்பது போல ‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையான நிலையில், கொசுவர்த்திச் சுருள் படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டிருப்பது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவை ஒழித்ததைப்போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், உதயநிதியின் அந்தப் பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக் கோரியும் பா.ஜ.க.வினர், இந்துத்துவ அமைப்பினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து இன்று மாநில அளவில் தமிழக பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, கடந்த வியாழனன்று, ஆளுநர் ரவியைச் சந்தித்த தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் உதயநிதி, பி.கே.சேகர்பாபு இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பு எதுவும் இல்லாமல் கொசுவர்த்திச் சுருள் ஒன்றின் படத்தை இல்லாமல் பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷ், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நீ விளையாடு நண்பா’ என்று உதயநிதியின் பதிவை உற்சாகத்தோடு பகிர்ந்துள்ளார்.

அமைச்சர்களின் இந்த ட்விட்டர் விளையாட்டு, ஏற்கெனவே சூடாக இருக்கும் சனாதன சர்ச்சையில் மேலும் சூட்டை அதிகரித்துள்ளது.

இதனிடையே, இன்று காலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “சனாதன் குறித்து மறைந்த தலைவர்கள் அம்பேத்கர், பெரியார், கலைஞர் மற்றும் வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோரை விட நான் குறைவாகத்தான் பேசியிருக்கிறேன். அன்று, சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் பேசியதுதான். அதையடுத்து, நீங்கள்தான் அதைப்பற்றி அதிகமாக பேசுகிறீர்கள். ஆனாலும், சனாதனத்தைப் பற்றி நான் தொடர்ந்து பேசுவேன்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com