மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக இருக்கிறது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
உள்துறைச் செயலாளராக இருந்த அமுதா உட்பட 65 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழ்நாட்டில் சில நாள்களுக்கு முன்னர் மாற்றப்பட்டனர். அதில், முதன்மைச் செயலாளர் நிலையில் உள்ள அமுதாவுக்கு முக்கியமான கவனத்துக்கு உள்ளாகக்கூடிய வருவார்- பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் மாற்றம் போன்றவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டிய உள்துறைச் செயலாளர் பதவியின்போது, அமுதா அவருக்கே உரிய வழக்கமான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இது காவல்துறையில் குறிப்பிட்டவர்களுக்குப் பிடித்தமானதாகவும் கணிசமானவர்களுக்குப் பிடிக்காமலும் இருந்தது என்பது துறை வட்டாரங்கள் சொல்லும் தகவல். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், என்கவுண்டர் சர்ச்சை அதிகாரி வெள்ளத்துரை மீதான வழக்கில் விசாரணை முடிவடையாமல் இருப்பதால் அவரை ஓய்வுக்கு முந்தைய நாளில் இடைநீக்கம் செய்தார், அமுதா.
அதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பிரச்னை கிளப்பப்பட்டது. அதையடுத்து ஒரே நாளில் அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டது.
அதையடுத்து, தலைநகரில் அதுவும் முதலமைச்சரின் தொகுதியில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரைக் கொலைசெய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது என பிரச்னை எழ, அதற்கடுத்து வரிசையாக அதிகாரிகள் மாற்றப்பட்டனர்; அவர்களில் அமுதாவும் ஒருவர்.
ஆனால் அவருக்கு புதிதாக மாற்றி வழங்கப்பட்ட துறை முக்கியத்துவம் கொண்டதாக உள்ள நிலையில், இப்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி பதவியும் அளிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், மக்களுடன் முதல்வர் திட்டம் முதலிய பல நிவாரணத் திட்டங்களுக்கும் தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஆட்சியில் மத்திய அரசில் பணியில் இருந்தவரை உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் தரப்படும் என்று கூறித்தான், இங்கு அழைத்துவந்தார்கள். அதன்படி, உள்துறைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்தப் பதவியில் இருப்பவரே மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளை நேரடியாகக் கையாளக்கூடிய அதிகாரம் படைத்தவர் என்பதால், தலைமைச்செயலாளர் பதவிக்கு அடுத்ததாக நடைமுறையில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்படியொரு நிலையில் அப்பதவியிலிருந்து அமுதாவை மாற்றியதில் அவருடைய நலம்விரும்பிகள் ரசிக்கவில்லை.
இந்த நிலையில், முதலமைச்சரின் அன்றாட கவனம் பெறக்கூடிய துறையின் சிறப்பு அதிகாரியாகவும் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான துறை அதிகாரிகளுடனும் பேசி கையாளக்கூடிய அதிகாரம் உள்ள பதவி என்பதால், அமுதாவின் முக்கியத்துவம் முன்னைவிர அதிகரித்துள்ளது என்றே அவரின் நண்பர்கள் தரப்பில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.