‘அமரன் திரைப்படத்தில் குறைகள் இருந்தாலும் கடந்து செல்வோம்’ – நாராயணன் திருப்பதி

Narayanan Thirupathi
நாராயணன் திருப்பதி
Published on

“அமரன் படத்தில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு குறைகள் ஏதேனும் இருந்தால் மறந்து, கடந்து செல்வோம்.” என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அமரன் திரைப்படம் பார்த்தேன். அற்புதமான படைப்பு. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட படத்தில் நடித்த அனைவரும் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு என்றும் இப்படத்தை அவரின் தியாகத்திற்கு அர்ப்பணிப்பதாகவும் படத்தின் துவக்கத்திலேயே தெரிவித்திருப்பது சிறப்பு. காவல் துறையில் பணியாற்றியவரின் மகனான சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது உண்மை.

கடந்த சில வருடங்களில், இது போன்ற தேசபக்தியை வெளிப்படுத்தும் தமிழ் படங்கள் அதிக அளவில் வரவில்லை என்ற நிலையில், காஷ்மீரில் 2014க்கு முன்பு நடைபெற்ற தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டியிருப்பது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகளவில் ராணுவத்தில் இருப்பதாக சொல்லப்பட்டிருப்பது மகிழ்ச்சி. படத்தின் பல்வேறு காட்சிகளின் முடிவில் பொது மக்கள்/ ரசிகர்கள் ஆராவாரம் செய்வது படத்தின் திரைக்கதை மற்றும் உணர்வுகளோடு ஒன்றிப் போவதை நம்மால் உணர முடிகிறது.

நாட்டுக்கு தன்னை அர்பணித்துக்கொண்ட ஒரு ராணுவ வீரனின் மனைவி எப்படி தன் வாழ்க்கையை கணவனின் விருப்பத்திற்காக அர்ப்பணித்து கொள்வார் என்பதற்கு உதாரணமாக சாய் பல்லவி தன் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தன் கணவன் இறந்த செய்தியை கேட்ட பின்னர் படத்தின் இறுதி வரை இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ராணுவ வீரனின் மனைவி என்ற பெருமையை அவரின் முகத்தில் வெளிப்படுத்துவது நடிப்பின் சிகரம் என்றே சொல்ல வேண்டும்.

பல மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், பல மதங்களை சேர்ந்த வீரர்கள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கிடையே இந்திய இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தை வேரறுக்க நம் ராணுவத்திற்கு எப்படி துணை புரிகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கமான விஷயங்களை இந்த படம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

மூன்று மணிநேரத்திற்குள் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அலசி, ஆராய்ந்து முழுமையாக சித்தரிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாக மேஜர் முகுந்த் அவர்களின் தாத்தா மற்றும் இரு தாய் மாமன்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்றும் அவர்களை முன்னுதாரணமாக கொண்டே முகுந்த் ராணுவத்தில் பணியாற்ற விரும்பினார் என்றும் நான் படித்ததாக நினைவு. ஆனால், இப்படத்தில் 5வது வகுப்பு படிக்கும் போது அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களை பார்த்து தனக்கு ஆசை வந்தது என்று சிவகார்த்திகேயன் சொல்வதாக அமைந்துள்ள காட்சியை தவிர்த்திருக்கலாம்.

இப்படத்தில் மேஜர் முகுந்தின் ஜாதியை மறைத்து விட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்களை பார்க்க முடிகிறது. அப்படி சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றே நான் கருதுகிறேன். அது படைப்பாளிகளின் உரிமை. ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்த தேவையில்லை அல்லது அவசியமில்லை என்றோ அல்லது அப்படி அடையாளப்படுத்தினால் படம் வெற்றி பெறுமா என்று படத்தின் தயாரிப்பாளர்களோ, இயக்குநரோ நினைத்திருக்கலாம். இந்த முடிவு முழுக்க முழுக்க வர்த்தகம் தொடர்பானது. 'அமரன்' படத்திற்கு வரி விலக்கோ அல்லது சலுகைகளோ எதுவும் இல்லை. லாபம் அடைந்தாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் அது முதலீடு செய்தவர்களுக்கே. மேலும், முகுந்த் வரதராஜனின் ஜாதி குறித்த உண்மைகளை மறைப்பது என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வே. இதனால் சமுதாயத்தில் எந்த மாற்றமோ/ தாக்கமோ ஏற்படப் போவதில்லை என்பதால் அவற்றை நாம் வழக்கம் போல் கடந்து சென்று விட வேண்டும் என்றே கருதுகிறேன். எத்துனையோ படங்களில் குறிப்பிட்ட ஜாதியை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் எந்த ஜாதியையும் இகழ்ந்தோ, பரிகசித்தோ அல்லது மிகைப்படுத்தியோ வசனங்களோ/ காட்சிகளோ இல்லை.

பாரதியின்,

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”- என்ற வரிகள் இந்த படத்தின் முதுகெலும்பாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆனாலும், ஒரு படத்தை படமாகத் தான் பார்க்க வேண்டும் என்பதிலும், அதில் உள்ள பொருளை, அந்த படம் சொல்லும் செய்தியை தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. திரைப்படம் எடுப்பது என்பது தொழில். முதலீட்டை செய்து லாபம் எடுப்பது தான் தொழில் தர்மம். அதனடிப்படையில் தொழில் சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் உறுதியாக கலைஞர்களுக்கு உள்ளது. வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு தான் படம் எடுக்கிறார்களேயன்றி, அப்படியே தத்ரூபமாக படம் எடுக்க முடியாது. சில மசாலாக்களை சேர்க்க வேண்டும். சில உண்மைகளை மறைக்க வேண்டும்.சில தரவுகளை மிகைப்படுத்த வேண்டும். அப்போது தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.

ஜாதியை விட, மதத்தை விட, இனத்தை விட, மொழியை விட தேசமே பெரிது என்பதை உணர்வுபூர்வமாக தட்டி எழுப்பியிருக்கும் திரைப்படம் 'அமரன்'.

இந்த படத்தை பொறுத்தவரையில் எதை மறைத்திருந்தாலும், எதை சேர்த்திருந்தாலும், எதை மிகைப்படுத்தியிருந்தாலும் கடைசி காட்சிகளில் படம் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கின்ற, பார்க்கப் போகிற ஒவ்வொருவருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வெளிவருவதை தடுக்க முடியாது! அதே போல் திரைப்படம் முடிவடைந்ததும் மக்கள் எழுந்து நின்று கைதட்டி கரகோஷம் எழுப்புவதை சமீப காலங்களில் தமிழ் திரைப்படங்களில் நாம் பார்த்ததில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற தேச பக்தன், தமிழன், இந்தியன் மீண்டும் நம் கண்களுக்கு, மனங்களுக்கு, காதுகளுக்கு உற்சாகத்தை 'அமரன்' மூலம் அளித்திருக்கிறார். அதில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு குறைகள் ஏதேனும் இருந்தால் மறந்து, கடந்து செல்வோம்.”என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com