சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இருந்தாலும் நிகழ்ச்சிக்கு வந்து செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி, முறையான திட்டமிடல் இல்லாதததால் பலர் நிகழ்ச்சியை காண முடியாமலும் வந்தவர்கள் திரும்பி செல்லவும் முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப் படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன.
இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், விமானப் படைத் தலைமைத் தளபதி மார்ஷல் ஏ.பி.சிங், விமான பயிற்சிப் படைப்பிரிவு தளபதி மார்ஷல் நாகேஷ் கபூர், விமானப்படை தின அணிவகுப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மார்ஷல் கே.பிரேம் குமார், தாம்பரம் விமானப் படைத் தளபதி ரதீஷ் குமார் உள்ளிட்டோருடன் லட்சக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இந்த சாகச நிகழ்ச்சியை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்தது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளது.
இந்த வான் சாகச நிகழ்ச்சிக்காக காலை 7 மணி முதலே மெரினாவில் குவியத்தொடங்கினர். நேரம் செல்ல செல்லச் செல்ல அண்ணா சாலையில் மெரினாவை ஒட்டியப் பகுதிகளில் வாகனங்கள் தேங்கத் தொடங்கி நெரிசல் உருவாகத் தொடங்கியது. அதேபோல், மெரினா நோக்கிச் செல்லும் சென்னை பல்வேறு சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால், பல மணி நேரம் வாகனங்கள் சாலைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னையில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலுக்கு போக்குவரத்து காவல்துறையின் திட்டமிடல் இன்மையே காரணம் என பாதிக்கப்பட்ட பயணிகள் பலரும் குற்றம் சாட்டினர்.
பறக்கும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ள வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், மைலாப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்வதே சவாலாக இருந்ததால் பலர் திரும்பிவிட்டனர். ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்த இடமின்றி பலர் திரும்பிச் சென்றனர். அங்கும் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாத நிலை காணப்பட்டது.
மேலும் மெரினாவில் விமான சாக நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பல லட்சம் பேர் வீடு திரும்பும் நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6,500 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.