காவிரி ஆறு
காவிரி ஆறு

காவிரி: அ.தி.மு.க. உட்பட அனைத்து கட்சி எம்.பி.களும் நாளை டெல்லியில் மனு!

Published on

தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.கள் நாளை கோரிக்கை மனு அளிக்கின்றனர்.

முன்னதாக, தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிடும்படி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு இனி தண்ணீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலைமை கருதி இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லவுள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு (தி.மு.க.), செல்வி.எஸ்.ஜோதிமணி (இ.தே.கா.), முனைவர் மு.தம்பித்துரை, என்.சந்திரசேகரன் (அ.இ.அ.தி.மு.க.), கே.சுப்பராயன் (சி.பி.ஐ.), பி.ஆர்.நடராசன் (சி.பி.ஐ.எம்.), வை.கோ. (ம.தி.மு.க.), முனைவர் தொல். திருமாவளவன் (வி.சி.க.), டாக்டர் அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), ஜி.கே.வாசன் (த.மா.கா.), கே.நவாஸ் கனி (இ.யூ.மு.லீ.), ஏ.கே.பி. சின்னராஜ் (கொ.ம.தே.க.) ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்கின்றனர் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com