மத்திய அரசைக் கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் அறிவிப்பு!

புதுச்சேரி
புதுச்சேரி
Published on

புதுச்சேரி ஒன்றியப்பகுதிக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல் அம்மாநில மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைப்பதாகக் கூறி, அதையெதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனப் போராட்டம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது ஆகியவற்றிற்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும்;

புதுச்சேரியை ஆளும் அரசு, ரேஷன் கடைகளைத் திறக்காதது, பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தாதது, அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதது, தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சிறப்புக் கூறு நிதியை முறையாகச் செயல்படுத்தாதது, மீனவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்காதது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஐ.டி. பார்க் உட்பட்ட புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவராதது, அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாதது, சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படாதது, மூடப்பட்டுள்ள அரசு பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது, மின் துறையை தனியார்மயமாக்கும் பிரச்னை, மின் கட்டணம் வசூலிப்பதில் பிரீபெய்டு முறை கொண்டுவரப்படுவது, ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளறுபடிகள், அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவு உட்பட்ட மாநிலம் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகளில் பாராமுகமாக இருந்துவருவதைக் கண்டித்தும், புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அனைத்துத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித் தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், 10.2.2024 சனி காலை 10 மணியளவில், புதுச்சேரி கடலூர் சாலை ஏ.எஃப்.டி. மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டமன்றப் பேரவை அருகில் சென்றடைந்து, அங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com