பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று அ.தி.மு.க.வின் மலர்க்கொடியும், த.மா.கா.வின் ஹரிகரனும் கைதுசெய்யப்பட்டனர். இன்று அவர்களை அந்தந்தக் கட்சிகளிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கைதானவர்களில் திருவேங்கடம் என்பவரை கடந்த ஞாயிறன்று காவல்துறை சுட்டுக்கொன்றது. அது மோதல் கொலை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் பா.ஜ.க. பிரமுகர் அஞ்சலையை காவல்துறை தேடிவருவதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு கட்சியினரும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, நீதிமன்றக் காவலில் இருந்தவரை காவல்துறைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போதே திருவேங்கடம் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் கேள்விகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தினர்.
இந்த வழக்கை முன்வைத்து தி.மு.க.வும் பா.ஜ.க.வும் அரசியல்ரீதியாக தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டுவருவதால் பரபரப்பும் தொடர்கிறது. எனவே, தன் கணவரையும் காவல்துறையினர் மோதல் கொலையெனக் கொன்றுவிடுவார்கள் என்றும் அவரின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் ஆவடி காவல் ஆணையரிடம் அருளின் மனைவி அபிராமி மனு அளித்துள்ளார்.