சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. இந்த சிலைகளைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் காதர்பாட்ஷா தலைமையிலான போலீசார், சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சர்வதேச சிலை கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து அப்போதையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை நடத்தி டிஎஸ் பி காதர் பாட்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த காதர் பாட்ஷா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராகப் பொய் வழக்குப் பதிவு செய்த பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன் மாணிக்கவேல் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ அதிகாரிகள் பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது 13 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குற்றம் நடந்ததாகக் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.