திருவள்ளூர் மாவட்டத்தில் 55 வயது பெண்ணை மூன்று இளைஞர்கள் கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கிறது, பில்லா குப்பம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான பெண் ஒருவர், தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி, ஊருக்கு அருகேயுள்ள கங்கை அம்மன் கோயில் பின்புறம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற மூன்று இளைஞர்கள், அந்தப் பெண்ணை கடத்திச்சென்று கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஓடிவிட்டனர். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து, அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களே பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, சந்தேகத்திற்கு உரிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், காவல்துறையினர் சி.எஸ்.ஆர்.கூட பதிவு செய்யாமல் இருந்ததாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரை சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஜனநாயக மாதர் சங்கச் செயலாளர் பத்மா, நிர்வாகிகள் கவிதா, ஜீவிதா, ராயபுரம் சிபிஎம் கட்சியின் பகுதிச் செயலாளர் பவானி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து ஆறுதலளித்தனர்.