தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்த அவர், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி, நோக்கியா நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதேபோன்று, பேபால் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து, மைக்ரோசிப் நிறுவனத்திற்கும், தமிழக அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுபோன்று, தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை அமைக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஓமியம் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, புரோட்டான் பரிமாற்ற சவ்வு, எலக்ட்ரோலைசர் அமைப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.