அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய தகவல்நுட்ப நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளச் செய்தார்.
அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்டாலின் நேற்று கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவற்றின் உயர் அலுவலர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் 29.8.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.
ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய் (ஃபாக்ஸ்கான்), பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளது. அங்கு அதன் உயரதிகாரிகளைச் சந்தித்த போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.
முதலமைச்சர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்க்ட் இன் முதன்மைச் செயல் அலுவலர்
யான் ரோஸ்லான்ஸ்கி, மற்ற உயர் அலுவலர்களைச் சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், உலகளாவிய வசதியளித்தல் மையம் Global Capability Centre (GCC), செயற்கை நுண்ணறிவுத் திறன் முயற்சிகளை உருவாக்குதல் உட்பட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.