20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு- ரூ.40,000 இழப்பீடு கேட்கும் பா.ம.க.

நெற்பயிர்கள்
நெற்பயிர்கள்
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் மழையால் 20,000 ஏக்கரில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்னரே, நிலத்தடி நீரை நம்பி காவிரிப் பாசனப் பகுதியில் குறுவை நெற்பயிர் சாகுபடி தொடங்கப்பட்டது. இப்போது குறுவைப் பயிர்கள் அறுவடை செய்யப்படும் நிலையில், மழையால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.

இதை இது பெரும் சோகம் என விவரித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி,

”மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் மழையால் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சேதமடைந்து விட்டன. உடனடியாக மழை நீர் வடியாவிட்டால் நெற்பயிர்கள் அழுகி விடும் ஆபத்து இருப்பதாக உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.” என்றும் கூறியுள்ளார்.

நடப்பாண்டில் இடுபொருட்கள் உள்பட்ட அனைத்திற்கும் விவசாயிகள் அதிக செலவு செய்துள்ளதால், நெல்லுக்கான உற்பத்திச் செலவும் கடுமையாக அதிகரித்திருக்கிறது; ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

என்.எல்.சி விவகாரத்தில் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அதனடிப்படையில், மயிலாடுதுறையில் மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல், கடலூர் மாவட்டம் தாழநல்லூர், வெண்கரும்பூர் ஆகிய பகுதிகளில் விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட்டிருந்த 5 ஆயிரத்துக்கும் கூடுதலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளன என்றும், ஈரப்பத விதிகளைத் தளர்த்தி, அந்த நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்யும்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com