அடேங்கப்பா... மகளிர் தொகைக்கு இதுவரை மட்டும் 1.54 கோடி பேர் மனு! இன்னும் எவ்வளவு பேர்?

மகளிர் உரிமைத் தொகை பதிவு தொடக்கம்
மகளிர் உரிமைத் தொகை பதிவு தொடக்கம்
Published on

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்​ மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு, இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், நிதி நெருக்கடி தொடர்ந்தநிலையில் அத்திட்டம் உடனடியாகத் தொடங்கப்படவில்லை.

பிறகு, அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டது. பல கட்ட அறிவிப்புகளுக்குப் பிறகு, வரும் செப்டம்பர் 15 முதல் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் இதைத் தொடங்கிவைத்தார்.

மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக, ஜுலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை முகாம்கள் நடத்தப்பட்டன. அடுத்த கட்டமாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பதிவு முகாம் நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாங்கும் குடும்பங்களின் தலைவிகளுக்கு இத்தொகை அளிக்கப்பட முடியாது எனும் நிபந்தனை நீக்கப்பட்டது.

இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள- ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்காகவும், ஏற்கெனவே பதியாமல் விடுபட்டவர்களுக்காகவும் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாள்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com