இலங்கை கடற்படையால் 15 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் கைது
Published on

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து 2 விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு தர கூறி மீனவர்களும் அவ்வப்போது போராட்டம் செய்து வருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மத்திய அரசை இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 15 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை 15 பேரையும் கைது செய்தது. மேலும் அவர்களிடமிருந்து 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துள்ளனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள்.

இதேபோன்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படகு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com