அத்திப்பள்ளி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
”தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் இன்று (7-10-2023) ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் அனுப்பிவைத்துள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.